ஞாயிறு, 21 ஜூன், 2009

போரும் வாழ்வும்.


கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்து கொண்டிருந்த போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விட்டது.சர்வதேச விடுதலை வரலாறில் வேறு எந்த இனமும் சந்திக்காத கொடூரமான வாழ்வை இலங்கை தமிழர்கள் எதிர் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த படு கொலைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது ராஜபக்ஷேயின் அரசு.தமிழ் நாட்டின் சொந்த சகோதரர்கள் கண்களை மூடிக்கொள்ள,உலகமே வேடிக்கை பார்க்க துடிக்க,துடிக்க இந்த நிகழ்வு நடந்து முடிந்து விட்டது.
"தேச பக்தி" என்ற பெயரில் வரலாறு முழுவதும் அந்த அந்த நாட்டின் சுயநல விஷமக்கருத்துக்கள் கட்டமைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன,இருக்கும் இந்தியாவை விடுங்கள்,உலக அரசியல் வானில் ஒரு செந்தாரகையாக தோன்றிய மாவோ உருவாக்கிய செஞ்சீனம் தன் நாட்டின் பச்சையான சுயநலம் கருதி இந்த படுகொலையை நிகழ்த்த எல்லா உதவிகளையும் செய்து வந்ததை மக்கள் அறிவார்கள்.அப்படி என்றால் இந்த நாடு பேசும் "பொதுவுடைமைக்கொள்கை" என்பது என்ன?தன் சுய நலத்திற்காக ஒரு இனத்தை படுகொலை செய்து அண்டை நாடுகளை மிரட்ட "அம்பாந்தோட்டையில்" ராணுவத்தளவாடம் அமைப்பது மட்டும் தானா?
இலங்கை அரசு பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவந்து விட்டதாக தன் நாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது.இந்த தீர்மானத்தை பாராட்டி வழிமொழியும் நாடுகள் வரிசையில் க்யுபாவின் புரட்சித்தலைவன் "பிடல் காஸ்ட்ரோவின்" பெயரும் இடம் பெறுகிறது.அப்படி என்றால் க்யுபா நடத்திய போராட்டத்திற்கு என்ன பெயர்?
என்னதான் புலிகள் மீது விமர்சனமும்,கருத்து முரண்பாடுகளும் இருந்தாலும் நடக்கும் மனித படுகொலைகளுக்கு எதிர் வரிசையில் எப்படி நம் காம்ரேடுகள் அமர்ந்திருக்கின்றனர் என்பது ஒரு புரியாத புதிர்.
இறுதியாக நான் கேட்கும் கேள்விகள் இது தான்.
விடுதலைப்போராட்டம் என்றால் என்ன?
பயங்கரவாதம் என்றால் என்ன?
போர்,வாழ்வு என்பது என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக